சாக்கடல் (Dead Sea)

dead sea
இஸ்ரேல் மற்றும் ஜோர்டன் எல்லையில் மத்திய தரைக்கடலோடு சேர்ந்திருக்கும் நீர்ப்பரப்புதான் சாக்கடல். உண்மையில் இது ஒரு கடல் கிடையாது. உப்பு நீர் நிறைந்த பெரிய ஏரி. சுமார் 67 கிலோமீட்டர் (42 மைல்) நீளமும், 18 கிலோமீட்டர் (11மைல்) அகலமும் கொண்ட இந்த சாக்கடலில் உப்பின் அளவு மிகுதியாக காணப்படுகிறது.

சாதாரண கடல் நீரை விட 8.6 மடங்கு உப்பு அதிகமாக இருப்பதால் இந்தக் கடலில் நாம் நீச்சல் அடிக்காமலேயே மிதக்க முடியும். பெரும்பாலான சுற்றுலா பயணிகள் சாக்கடலில் மிதந்து கொண்டே புத்தகங்களும், செய்தித்தாள்களும் படிக்கும் காட்சியை அடிக்கடி காணலாம்.

உப்புச்செரிவு அதிகமானதால் உயிரினங்களின் குடி நீராகவோ வாழ்விடமாகவோ இது இருப்பதில்லை. அதனால் சாக்கடல் அல்லது இறந்த கடல் (Dead Sea) என்று அழைக்கப்படுகிறது. பல ஆறுகளில் இருந்து வரும் நீர் இங்கு தேங்கி நிற்கின்றது. ஆனால், இங்கிருந்து வேறு எங்கும் நீர் விரையமாவதில்லை. ஆறுகளின் நீர் இறுதியாக வந்தடையும் இடம் இது.

சாக்கடல் என்ற பெயரைக் கேட்கும்போது எந்த ஒரு உயிரினமும் இல்லாத கடல் என்றுதானே நாம் நினைப்போம்? அது தவறு. உப்பை உணவாகக் கொள்கின்ற பலவித நுண் உயிரிகள் சாக்கடலில் நல்லபடியாக வாழ்கின்றன. ஹாலோ பாக்டீரியம், ஹாலோபியம், ட்யூனாலைலா எனும் நுண் உயிரிகளை உதாரணமாகச் சொல்லலாம். இவை சூரிய ஒளியைப் பயன்படுத்தி உணவை உருவாக்கிக்கொள்ளும் திறன் பெற்றவை. இவை, தாவரங்களில் உள்ள குளோரோபிலுக்குச் சமமான ஒரு இயற்கைப் பொருளை தாமாகவே உற்பத்தி செய்து, அதன் உதவியுடன் உணவை உற்பத்தி செய்துகொள்கின்றன.

அது மட்டுமன்றி சாக்கடலுக்கு அடியில் நீரூற்றுகள் உள்ளன. உலகிலேயே பள்ளமான பகுதி இதுவாகும். கடல் மட்டத்தில் 423 மீட்டர் (1388 அடி) ஆழமானது.

இந்த சாக்கடலில் பொட்டாசியம், மக்னீசியம், புரோமைடுகள் உள்ளிட்ட பொருட்கள் பெருமளவில் கிடைக்கின்றன. இவை ரசாயன மற்றும் ரசாயன உரத் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.

எகிப்தில் ஆயிரம் ஆண்டுகளாக மம்மிக்கள் கெட்டுப் போகாமல் இருக்க காரணம் சாக்கடலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வகைப் பொருள்கள்தான்.

சாக்கடல் நீரை இரண்டு முழுங்கு குடிக்க நேர்ந்தால் குரல் வளைப் பகுதி வீக்கம் கண்டுவிடும். அதனால் மூச்சு விட முடியாமல் போகலாம். சாக்கடல் நீர் கண்களில் பட்டால் பார்வை பறி போகின்ற ஆபத்து உண்டு.

சாக்கடல் நீரிலும் சேற்றிலும் கலந்துள்ள மருத்துவ குணங்கள் தோல் நோய்களுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இச்சேறு சொரியாசிஸ் உட்பட சில தோல் கோளாறுகளைக் குணப்படுத்துவதாகக் கருதப்படுகிறது. இதற்காகவே ஏராளமான பேர் இங்கு வந்து சாக்கடல் சேற்றை உடலில் பூசிக் கொள்கின்றனர். இதனாலேயே சாக்கடலுக்கு the lowest health spa மற்றும் நேச்சுரல் ஸ்பா (natural spa) என்ற பெயரும் உண்டு.

எகிப்திய அரசி கிளியோபட்ரா சாக்கடலின் கரையோரத்தில் கிடைத்த கனிமங்களைக் கொண்டு அழகு சாதனப் பொருட்கள், மற்றும் மருந்து வகைகள் தயாரிக்கும் தொழிற்சாலை நிறுவ, உரிமனம் பெற்றதாகச் சொல்லப்படுகிறது.

1960 ஆம் ஆண்டு வரை சாக்கடலின் மேற்பகுதியில் உப்புத்தன்மை குறைவாயும், ஆழப் பகுதிகளுக்குச் செல்லச் செல்ல உப்புத்தன்மை அதிகமாயும் காணப்பட்டது. நீர்ப் பாசனத்துக்குக்காக ஜோர்டான் ஆறு திசை திருப்பட்டதாலும் மழை குறைந்ததாலும் சாக்கடல் பெறும் நீரின் அளவு குறைந்தது.

1975 ஆம் ஆண்டளவிலிருந்து சாக்கடலின் மேற்பகுதி உவர்ப்புத் தன்மை அதிகமுள்ளதாக மாறியது. இதற்கு இரு காரணங்கள் உள்ளன: 1. சுற்றியுள்ள பகுதியின் ஆறுகள் இக்கடலில் கலத்தல் (ஆற்று நீரிலுள்ள கனிம உப்புக்கள்) 2. ஆவியாதல் மூலம் மட்டுமே இக்கடலிலிருந்து நீர் வெளியேறுதல்.

சாக்கடலின் முக்கிய நீர் ஆதாரமான ஜார்டன் நதி நீரின் அளவு தற்போது குறைந்து கொண்டே வருவதால் இந்தக் கடலின் பரப்பு குறைந்து கொண்டு வருகிறது. ஜோர்டானிலும், யார்மோக் ஆறுகளின் மூலமாகவும் மனித பயன்பாட்டிற்காக அதிக அளவில் நீர் எடுத்தது ஒரு காரணமாக கூறப்படுகிறது. மேலும் இஸ்ரேலும் ஜோர்டானும் தங்களுடைய பொட்டாஷ் தொழிற்சாலைகளுக்கு தேவையான நீரை சாக்கடலில் இருந்து எடுத்துள்ளன.

உலகிலேயே மிக நீண்ட காலமாக மக்கள் தொடர்ந்து வசித்து வருமிடமாக சாக்கடலுக்கு அண்மையிலுள்ள ஜெரிக்கோ (எரிக்கோ) நகரம் நம்பப்படுகிறது.

கடந்த முப்பது வருடங்களில் சாக்கடலின் நீர்மட்டம் ஆண்டிற்கு 0.7 மீட்டர் குறைந்து வருகிறது. நீரின் கன அளவு ஆண்டிற்கு 0.47 கன கிமீ குறைந்து வருகிறது. நீர்ப்பரப்பின் அளவும் ஆண்டிற்கு 4 சதுர கிமீ அளவில் குறைந்து வருகிறது.

மற்ற வளரும் நாடுகளுக்கு இந்த ஆய்வுகள் ஒரு எச்சரிக்கை மணியாகும். நீர்வளத்தை எச்சரிக்கையுடன் கையாளத் தேவையான திட்டங்களை ஒவ்வொரு நாடும் நடைமுறைப்படுத்த வேண்டும்.